Volg ons
iBookstore
Android app on Google Play
Vind ik leuk
Een programma van
பூமியின் சுவாசப்பையை சுத்தமாக வைத்திருக்கும் செய்மதிகள்
15 June 2018

பூமியின் சமுத்திரங்களில் எல்லாமே உண்டு: மிக மிகச் சிறிய நுண்ணங்கிகளில் இருந்து இதுவரை உலகில் வாழ்ந்த பெரிய உயிரினம் வரை அங்கேதான் காலத்தைக் கடத்தியுள்ளன. சமுத்திரங்கள் பனியால் உறைந்திருக்கலாம், அல்லது வெப்பத்தால் சூடாகலாம், ஆழமில்லாத பகுதிகளில் சூரிய ஒளி நுழையலாம், ஆனாலும் சூரிய ஒளியையே பார்க்காத ஆழமான சமுத்திரப் பகுதிகளும் உண்டு. எப்படியோ சமுத்திரங்கள் உலகில் உள்ள மிகவும் அற்புதமான பகுதிகளாகும்.

இதனையெல்லாம் விட முக்கியமான ஒன்று, ஆரோக்கியமான சமுத்திரம் எமது வாழ்வுக்கு அடிப்படை. எமக்கு உணவு தருவதில் தொடங்கி, குடிக்கும் நீரை சுத்திகரிப்பதற்கும், காலநிலையை பேணுவதற்கும், நோய்களை குணப்படுத்தும் மருந்துகளை தயாரிக்கவும் இவை உதவுகின்றன -  இப்படி பல நன்மைகளை செய்தாலும் இதற்கு எல்லாம் மேலே நாம் சுவாசிக்கும் ஆக்சிஜன் வாயுவில் பெரும்பகுதியை இவையே உற்பத்தி செய்கின்றன – இவை நமது கோளின் சுவாசப்பை என்று கூறலாம்.

இதனால்தான் ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதத்தில் உலக சமுத்திர தினம் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் உலகின் பல பாகுதிகளில் இருக்கும் மக்களும் ஒன்று சேர்ந்து சமுத்திரங்களை கொண்டாடி அவற்றை எப்படி பாதுகாப்பது என்றும் முடிவெடுக்கின்றனர்.

இந்த வருடத்தின் சமுத்திர தினத்தின் ஆரம்பமாக அண்மையில் விண்ணுக்கு அனுப்பப்பட்ட சென்டினல்-3 செய்மதி எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். இந்தப் படம் சென்டினல்-3  செய்மதி எடுத்த முதலாவது புகைப்படங்களில் ஒன்றாகும். இது பூமிக்கு மேலே 800 கிமீ உயரத்தில் பூமியைச் சுற்றி வருகிறது.

இந்தப்படத்தில் முகில்கள் அற்றவடக்கு ஐரோப்பாவை பார்க்கலாம். உங்களால் பனியால் மூடப்பட்டுள்ள நோர்வேயின் மலைகளை பார்க்கக் கூடியவாறு இருக்கிறதா? வடக்கு கடலில் இருக்கும் நிறைந்திருக்கும் பைட்டோபிலாங்க்டன்களை (phytoplankton – கடலின் மேற்பரப்பிற்கு கீழே பாரிய அளவுகளில் வாழும் ஒரு வகையான தாவர இனம்.) கண்டறியக்கூடியவாறு இருக்கிறதா?

ஆனால் சென்டினல்-3 செய்மதி விண்ணுக்கு அனுப்பப்பட்டதன் நோக்கம் வெறும் அழகிய புகைப்படங்களை எடுப்பதற்கு மட்டும் அல்ல. இந்தச் செய்மதியில் கடலின் வெப்பநிலை, நிறம் மற்றும் கடல் ஆழம் என்பவற்றை அளப்பதற்கு தேவையாக பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய பல கருவிகள் உண்டு.

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வாரமும், ஒவ்வொரு வருடங்களும் என்று தொடர்ச்சியாக இதன் மூலம் பெறப்படும் தரவுகளைக் கொண்டு எப்படி கடல்கள் மாற்றமடைகின்றன என்று எம்மால் கண்டரியக்கூடியதாக இருக்கும். இதன் மூலம் கடல்மட்டம் அதிகரிக்கிறதா, கடல் மாசடையும் வீதமென்ன, பைட்டோபிலாங்க்டன் அளவுக்கதிகமாக வளர்கிறதா என்றெல்லாம் கண்டறியக்கூடியதாக இருக்கும். இந்த தகவல்களைக் கொண்டு எமது பூமியின் சுவாசப்பையை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் எம்மால் வைத்திருக்கலாம்.

ஆர்வக்குறிப்பு

உலகில் இருக்கும் ஒவ்வொருவராலும் சமுத்திரங்களை பாதுக்காக உதவமுடியும்: முறையாக வளர்த்து பிடிக்கப்பட்ட மீன்களை வாங்குவதன் மூலமும், பிளாஸ்டிக் பாவனையைக் குறைப்பதன் மூலமும், கடற்கரைகளை சுத்தப்படுத்துவதற்கு உதவுவதன் மூலம் எம்மாலும் உதவமுடியும்!

M Sri Saravana, UNAWE Sri Lanka

Share:

Afbeeldingen

Satellietfoto van Noord-Europa
Satellietfoto van Noord-Europa

Printer-friendly

PDF File
1,0 MB
Nieuwsbrief

Cassini Scientist for a Day


Universe in a Box