Volg ons
iBookstore
Android app on Google Play
Vind ik leuk
Een programma van
பிரபஞ்ச அரக்கணுக்கு உணவளிப்பது எப்படி?
4 June 2020

ஒவ்வொரு விண்மீன் பேரடையின் மத்தியிலும் - நமது பால்வீதி உள்ளடங்கலாக - பெரிய கருந்துளை காணப்படும். இவை பெரும் திணிவுக் கருந்துளைகள் என அழைக்கப்படுகின்றன. இதற்கு காரணம் எமக்குத் தெரிந்த மிகப்பெரிய வகையாக கருந்துளைகள் இவைதான். இவற்றின் அளவு மற்றும் எண்ணிக்கை அதிகளவில் இருந்தாலும் இவை எப்படி எங்கிருந்து உருவாக்கியது என்று எமக்கு உறுதியாக தெரியாது. தற்போதய புதிய ஆய்வின் மூலம் விஞ்ஞானிகள் பெரும் திணிவுக் கருந்துளைகளின் உருவாக்கம் பற்றிய புதிய கருதுகோள் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இதற்குக் காரணம் இவற்றின் உணவே.

பெரும் திணிவு விண்மீன்கள் 

அதிகளவான விண்ணியலாளர்கள் பாரிய வாயுத் திரள்கள் மற்றும் தூசுகள் ஒன்று சேர்ந்து ஈர்ப்புவிசையால் பெரும் திணிவுக் கருந்துளைகள் உருவாவதாக கருதுகின்றனர். ஒரு பெரும் விண்மீனின் வாழ்வுக் காலத்தின் இறுதியில் அவை பெரும் திணிவுக் கருந்துளையாக மாற்றமடையலாம். 

ஆனாலும் இதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. இந்த கோட்பாடு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றால் குறித்த வாயுத் திரள் சுத்தமான  ஹைட்ரோஜன் மற்றும் ஹீலியம் மூலகங்களால் உருவாகியிருக்கவேண்டும். அப்படியான வாயுத்திரள்கள் ஆதிகால பிரபஞ்சத்தில் (இளமைக் கால பிரபஞ்சம்) மட்டுமே காணப்பட்டது. எனவே அக்காலத்தில் உருவான பெரும் திணிவுக் கருந்துளைகள் பற்றி பிரச்சினை இல்லை. ஆனால் தற்போது நாம் அவதானிக்ககூடியதாக இருக்கும் அனைத்து பெரும் திணிவுக் கருந்துளைகளும் இந்தப் பொறிமுறை மூலம் உருவாகியிருக்க முடியாது.

செறிவான வாயுத்திரள்கள்

ஜப்பான் டோகோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் வேறு எப்படியான பொறிமுறைகள் மூலம் பெரும் திணிவுக் கருந்துளைகள் உருவாகுமென ஆய்வு மேற்கொண்டுள்ளனர். பிரபஞ்சத்திற்கு வயதாக வெறும் ஹைட்ரோஜன் மற்றும் ஹீலியம் வாயுக்களை மட்டுமே கொண்டுள்ள வாயுத்திரள்கள் அரிதாகிவிட்டது. இந்த வாயுத்திரள்களில் ஆக்ஸிஜன் மற்றும் கார்பன் போன்ற ஏனைய பாரமான மூலகங்களும் இணைந்துகொண்டுவிட்டன. இது இந்த வாயுத்திரள்கள்களின் கட்டமைப்பிலும், செயற்பாட்டிலும் பெரிதும் மாற்றங்களை ஏற்படுத்தியது - இதனால் இவற்றால் பெரும் திணிவு விண்மீன்களை உருவாக்கமுடியவில்லை. 

அசுர அளவுகொண்ட வாயுத்திரள்கள் சிறு சிறு பகுதிகளாக உடைந்து அவற்றில் இருந்து சிறிய விண்மீன்கள் பிறந்தன. இவ்வகையான விண்மீன்களால் பெரும் திணிவுக் கருந்துளைகளை உருவாக்கமுடியவில்லை.

எனவே இவற்றை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் இப்படி உடைந்துபோன பாரமான மூலகங்களும் (ஆக்ஸிஜன், கார்பன்) சேர்ந்த வாயுத்திரள் கலவையில் இருந்து பெரும் திணிவுக் கருந்துளைகளை உருவாக்கமுடியுமா என தங்களை தாங்களே கேள்வி கேட்டுக்கொண்டனர். இதற்கான விடையை தெரிந்துகொள்ள கணணி உருவகப்படுத்தல் முறையை பயன்படுத்தி மேற்கூறப்பட்ட வாயுத்திரள்களை வடிவமைத்து மிகச் சக்திவாய்ந்த புதிய சுப்பர்கணனிகள் மூலம் அவற்றின் கூர்ப்பு எப்படி இருக்கும் என அவதானித்தனர்.

ஒரு புதிய கோட்பாடு

கணணி உருவகப்படுத்தலின் முடிவு ஆய்வாளர்களை ஆச்சரியப்படுத்தும் விதத்தில் இருந்தது. இந்த ஆய்வின் முடிவில் பாரமான மூலகங்கள் சேர்ந்த வாயுத்திரள்களில் இருந்தும் பெரும் திணிவுக் கருந்துளைகள் உருவாகும் என்று தெரியவந்துள்ளது. பாரமான மூலகங்களை கொண்டுள்ள வாயுத்திரள்கள் துண்டுகளாக உடையும் என்பது உறுதி, ஆனாலும் இப்படி உடைந்த துண்டுகளில் இருந்து உருவாகிய விண்மீன்கள் வாயுத்திரளின் மையப்பகுதிக்கு காலப்போக்கில் ஈர்ப்புவிசையால் கவரப்பட்டு அங்கே ஏனைய விண்மீன்களால் உண்ணப்படும். காலப்போக்கில் சில விண்மீன்கள் ஏனைய பல விண்மீன்களை கபளீகரம் செய்து பெரும் திணிவு விண்மீன்களாக உருவாகும், இவையே அவற்றின் வாழ்வுக்காலத்தின் இறுதியில் பெரும் திணிவுக் கருந்துளைகளாக மாற்றமடையும்.

இந்த புதிய ஆய்வு மூலம் பெரும் திணிவுக் கருந்துளைகள் தூசுகளை/வாயுக்களை மட்டுமே உட்கொண்டு உருவாவவை அல்ல. மாறாக மேலும் பல சிறிய விண்மீன்களை உணவாக உட்கொண்டும் இவை உருவாகின்றன என்று எமக்கு தெரிகிறது.

படவுதவி: NAOJ

ஆர்வக்குறிப்பு

பெரும் திணிவுக் கருந்துளைகள் சூரியனைப் போல 10 பில்லியன் மடங்கு வரை திணிவைக் கொண்டிருக்கும்!

M Srisaravana, UNAWE Sri Lanka

Share:

Printer-friendly

PDF File
962,0 KB
Nieuwsbrief

Cassini Scientist for a Day


Universe in a Box